

முகடுடைய பந்தல் அமைக்கும் பழக்கம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பந்தலின் உள்பகுதியில் மேலுக்கு துணிகளைக் கட்டுவார்கள். அழகுக்காகவும் திருமணச்சடங்குகள் நடக்கும் பொழுது பந்தலின் மேலிருந்து தூசி அழுக்குப் பொருட்கள், பல்லி போன்றன விழுந்துவிடாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பந்தலை கமுகு, வாழை, தென்னை ஓலைகளால் அலங்கரிப்பர். வாழைமரம் ஒருமுறைதான் குலைபோடும் அதுபோல் எமது வாழ்விலும் திருமணம் ஒருமுறைதான் என்பதை உணர்த்துகிறது. பாக்கு கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் இது தம்பதிகள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. வாழையும் தென்னையும் கற்பகதரு இவை அழியாப்பயிர்கள் ஆகும். தென்னை நூற்றாண்டு வாழக்கூடியது. “வாழையடி வாழையாக” வளர்வது தேங்காயும் வாழைப்பழமும் இறைவழிபாட்டில் முக்கியமாகின்றது. தம்பதிகள் நிலைத்து நின்று அனைவருக்கும் பயன்படக்கூடியதாக வாழவேண்டும் என்ற தத்துவத்தையே உணர்த்துகிறது. திருமணம் வசதிக்கேற்ப பெண்வீட்டிலோ, கோயிலிலோ அல்லது வேறுமண்டபத்திலோ வைக்கலாம். அப்படி வேறு மண்டபத்தில் வைப்பதானால் இருவரது வீட்டு வாசல்களிலும் மண்டபவாயிலில் மாவிலை, தோரணம், வாழைமரங்களால் அலங்கரிக்கப்படவேண்டும். வாழைமரம் கட்டுவதன் நோக்கம் வாழையடி வாழையாக வாழைமரம் தழைத்து வருவது போல, நமது சந்ததியும் பெருக வேண்டும் என்பதாகும். மாவிலை தோரணங்கள் மங்கள முறையாகக் கட்டவேண்டும். வாசலில் நிறைகுடம் வைக்கவேண்டும். வசதிக்கேற்ப வீடுகளையும் மண்டபத்தையும் அலங்கரிக்கலாம். மண்டபத்தில் நன்கு அலங்கரிக்கப்பட்டே மணவறை கிழக்கு நோக்கி அமைக்கப்படவேண்டும். மணவறையின் முன்பு சுவாமி அம்பாள் கும்பங்கள், சந்திரகும்பம், விநாயக பூஜை, பஞ்சகௌவ்விய பூசைகென ஒரு கும்பம், அக்கினி கிரியைக்குரிய பாத்திரம், அம்மி, மஞ்சள் நீர் ஆகியவை வைக்கப்படும்.
We hate spam too.